பிரம்மஸ்ரீ வேதபுரி அவர்கள்
ஸ்ரீ மஹாபெரியவா சரணம்.
மஹாபெரியவரால் பிரம்மஸ்ரீ என்று பட்டம் கொடுக்கப்பட்ட ஸ்ரீ வேதபுரி மாமா (பூர்வாஸ்ரம நாமம்) அவர்கள் பெரியவா சரணகமலங்களை அடைந்ததை அறிந்தபோது எழுந்த நினைவலைகள்.
பெரியவாளை உம்மாச்சி என்று அழைக்கும் சிறு பிராயத்திலேயே பெரியவா, சிறுவன் வேதபுரியைத் தனது கைங்கர்யம் செய்யும் குழுவில் சேர்த்துக்கொண்டார். மிகவும் வெகுளியான அந்தத் தாயில்லாக் குழந்தையை ஒரு தாயின் பரிவோடு கவனித்துக்கொண்டார் பெரியவா. பெரியவரோடு சதா இருக்கும் பாக்கியம் பெற்ற அவர் வளர, அவருக்குத் திருமணம் செய்து வைத்துப் பின்னர் அவரது குழந்தைகளின் திருமணத்தையும் நடத்திக்கொடுத்ததையெல்லாம் நாம் அறிகிறோம் (in வீழித்திருநேரம்). பெரியவரின் கடுமையான ஆசாரங்களுக்கு ஈடு கொடுத்துக் கைங்கர்யம் செய்துள்ளார், மாமா.
சில வருடங்களுக்கு முன் பெரியவாளுக்கு கைங்கர்யம் செய்தவர்களைக் கௌரவித்த ஒரு நிகழ்ச்சியில், எனக்கு வேதபுரி மாமாவைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவருக்கு 90 வயதிருக்கும். அப்போது பேசுகையில்கூட அவர், பெரியவாளை உம்மாச்சி என்றே குறிப்பிட்டார். மிகவும் இன்னொசென்ட் ஆக, "எனக்கு எல்லாமே என் உம்மாச்சிதான், அவரைத்தவிர
எனக்கு ஒன்றுமே தெரியாது" என்றார்.
அவருக்கு பிரம்மஸ்ரீ என்ற அடைமொழியைக் கொடுத்துப் பின்னாளில் ஸன்யாஸாஸ்ரமத்தையும் அருளியிருக்கிறார், பெரியவா. ஒன்றுமறியாக் குஞ்சினைத்தன் சிறகில் வைத்துக் காக்கும் தாய்ப்பறவை போல பெரியவா அவரைக் கவனித்து வந்திருக்கிறார்.
நீரே கதி என சரணடைபவர்களது லௌகீகத்தைப் பெரியவா பார்த்துக் கொள்வார் என்பது ப்ரத்யக்ஷமாகத் தெரிகிறது அல்லவா?
இக வாழ்வில் வேதபுரி மாமாவுக்கு அருளிய பெரியவா, சர்வநிச்சயமாக அவருக்குப் பிறவியில்லாப் பெருநிலையை அனுக்கிரகம் செய்திருப்பார்.
Comments
Post a Comment